1) உலக அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்கைக் கூறு?
இந்தியா விடுதலைக்குப் பிறகு உலக விவகாரங்களில் தீவிரமாகவும், தன்னிச்சையாகவும் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் மிகக் குறுகிய காலத்தில் உலக அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. இந்தியா அமைதியை அடிப்படையாகக் கொண்ட நாடு. எனவே உலகில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. சர்வதேச அரங்கில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2) உலக அமைதியை மேம்படுத்துபவர் :-
(a) இந்தியா எவற்றில் முக்கிய பங்காற்றி வருகிறது?
இந்தியா பல்வேறு உலகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
(b) பிரச்சனைகளைத் தீர்பபதன் மூலம் எவை நிலைநாட்டப்படுகின்றன?
அமைதி மற்றும் பாதுகாப்பு
(c) இந்தியாவின் முய்றசியால் அமைதி நிலைநாட்டப்பட்ட நாடு எது?
கொரியா மற்றும் இந்தோ-சீனா
(d) இந்தியாவின் தலையீட்டால் எப்போர் தவிர்க்கப்பட்டது?
இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகள் எகிப்தை தாக்கிய போது உலகப்போர் ஏற்படும் ஆபத்து தோன்றியது. ஆனால் தகுந்த நேரத்தில் இந்தியா தலையிட்டு போரைத் தவிர்த்தது.
3) பஞ்சசீலம் :-
(a) இந்தியா எதை உருவாக்கும் நாடு?
இந்தியா ஒரு மாபெரும் அமைதியை உருவாக்கும் நாடு.
(b) எந்த ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தார்?
1955-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தார்.
(c) 1955-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு எது?
பாண்டுங் மாநாடு
(d) பாண்டுங் மாநாட்டில் எக்கொள்கை வெளியிடப்பட்டது?
பாண்டுங் மாநாட்டில் உலக அமைதிக்காக 5 அம்சக் கொள்கையினை ஜவஹர்லால் நேரு வெளியிட்டார். அவை " பஞ்ச சீலக் கொள்கை " என அழைக்கப்படுகிறது.
4) பஞ்சசீலக் கொள்கைகளை எழுதுக?
1. ஒவ்வொரு நாடும்பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்கவேண்டும்.
2. எந்த ஒரு நாடும் பிற நாட்டை தாக்கக்கூடாது.
3. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது.
4. அனைத்து நாடுகளும் பரஸ்பர நல்லுரவு மற்றும் சமத்துவம் கொண்டிருக்க வேண்டும்.
5. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கியிருத்தல் வேண்டும்.
5) ஆயுதக்குறைப்பு மற்றும் அணு ஆயுதங்கள் : -
(a) வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு எது அவசியம் எனப்படுகிறது?
உலக அமைதியே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சிக்கும் அவசியமானதாகும்.
(b) உலக நாடுகளை அச்சுருத்தும் செயல் எது?
உலக நாடுகளில் சில பெரும் ஆபத்தை விளைவிக்கும் அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்கி வருகின்றன. இது மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
(c) அணு ஆயுத உற்பத்தியை கடுமையாக எதிர்க்கும் நாடு எது?
இந்தியா.
(d) ஆயுதக் குறைப்பு தீாமானம் கொண்டு வந்த ஆண்டு, நாடு எது?
ஐ,நா. பொதுச் சபையில் 1956 ஆம் ஆண்டு ஆயுதக் குறைப்புத் தீர்மானம் இந்தியாவால் கொண்டு வரப்பட்டது.
(e) ஆயுதத் தடை ஒப்பந்தம் உருவான ஆண்டு எது?
1963 ஆம் ஆண்டு ஆயுதத் தடை ஒப்பந்தம் உருவானது. இதற்கு இந்தியா முக்கியப் பங்காற்றியது.
6) அணி சேராக் கொள்கை பற்றிக் குறிப்பு வரைக?
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உலக நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் இரண்டு பகைமை அணிகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு அணிகளும் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட பல முயற்சிகளில் இறங்கின. இதனால் உலகில் பதற்ற நிலை மற்றும் அமைதியின்மை ஏற்பட்டது. ஆனால் இந்தியா இந்த இரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை நாடாக அதாவது அணிசேரா நாடாக விளங்கி வருகிறது. அமெரிக்க ரஷ்ய அணிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது இந்தியா அவற்றை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து உலகில் அமைதியை நிலை நாட்டி வருகிறது.
7) இந்தியா மற்ற நாடுகளுக்கு எந்த வகையில் உதவியாளராக செயல்பட்டு வருகிறது?
உலக நாடுகள், பிற நாடுகளின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவு தெரிவிக்கின்றது. இதற்குச் சான்றாக ஹாலந்து நாட்டின் பிடியிலிருந்து இந்தோனேசியா விடுதலை பெறுவதற்கு இந்தியா பெரிதும் உதவியதைக் கூறலாம்.
மேலும் இதே போன்று எகிப்து, சூடான், இந்தோ-சீனா, கானா, மொராக்கோ மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளில் நடைபெற்ற தேசிய இயக்கத்திற்கு இந்தியா முழு ஆதரவைக் கொடுத்தது
இவ்வாறு இந்தியா உலக அமைதிக்காக மாபெரும் உதவியாளராகவும் செயல்பட்டு வருகிறது.
8) இராணுவ ஒப்பந்தம் :-
(a) தற்போது உலக நாடுகள் எதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன?
தற்கால உலகில் உலக நாடுகள் இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் எதிர் ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
(b) இராணுவ ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட ஒப்பந்தங்கள் யாவை?
நேட்டோ, சீட்டோ, சென்ட்டோ, பாக்தாத் மற்றும் வார்சா போன்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.
(c) இராணுவ ஒப்பந்தங்களைப் பற்றி இந்தியாவின் நிலை என்ன?
இராணுவ ஒப்பந்தங்களில் எதிலும் இந்தியா சேரவில்லை. மேலும் இந்த ஒப்பந்தங்களுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
9) அடக்கு முறை மற்றும் அநீதிக்கு எதிராக இந்தியா செயல்படுவதை சான்றுடன் கூறுக.
உலகில் எந்தப் பகுதியிலும் அடக்குமுறை மற்றும் அநீதி இழைக்கப்படுமேயானால், இந்தியா அதற்கு உடனடியாக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. பிரான்சு அல்ஜீரியாவிற்கு எதிராகவும், இங்கிலாந்து சைப்ரஸ்க்கு எதிராகவும், ரஷ்யா ஹங்கேரிக்கு எதிராகவும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டபோது இந்தியா அந்த நாடுகளை வன்மையாகக் கண்டித்தது. இதுவே அடக்குமுறை மற்றும் அநீதிக்குஎதிராக இந்தியா செயல்படும் என்பதற்கான விளக்கமாகும்.
10) ஐக்கிய நாட்டு சபையில் இந்தியாவின் பங்கு பற்றிக் கூறுக.
இந்தியா ஐ.நா-வின் தீவிர ஆதரவாளராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியா ஐ.நா-வின் கொள்கைகளுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறது. மேலும் அக்கொள்கைகள் வெற்றி பெறவும் அதன் மூலம் உலக அமைதியை நிலைநாட்டவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஐக்கிய நாட்டு சபையில் சீனாவை உறுப்பினராவதற்கு இந்தியா தனது ஆதரவைத் தருகிறது. இவ்வாறு இந்தியா ஐக்கிய நாட்டு சபையில் பங்கு பெறுகிறது.
11) இன ஒதுக்கல் கொள்கை :-
(a) இன ஒதுக்கல் கொள்கை என்பது என்ன?
ஆப்பிரிக்காவில் பின்பற்றப்பட்ட இன வேறுபாட்டுக் கொள்கை
(b) எக்கொள்கை இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைக்கு அடிப்படையாகத் திகழ்கிறது?
உலகில் அனைத்துப் பகுதியில் வாழும் மக்களும் சமமானவர்கள் என்ற கொள்கையாகும்.
(c) ஐ,நா. வில் இந்தியா முதன் முதலில் எழுப்பிய பிரச்சனை யாது?
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையாகள், ஆப்பிரிக்க குடிமக்களுக்கு சம உரிமை வழங்க மறுத்தனர். இப்பிரச்சனையை 1946ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா முதன் முதலில் எழுப்பியது.
(d) இன ஒதுக்கல் கொள்கை எந்த ஆண்டு, எவ்வாறு முடிவுக்கு வந்தது?
இன ஒதுக்கல் கொள்கை 1990-ஆம் ஆண்டு இந்தியாவின் ஆதரவு மற்றும் நெல்சன்மண்டேலாவின் தொடர் போராட்டம் காரணமாக முடிவுக்கு வந்தது.
12) நெல்சன் மண்டேலா பற்றி எழுது.
நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க குடிமக்களின் சம உரிமைக்காக தென் ஆப்பிரிக்காவின் வெள்ளையர்களிடம் தொடர்ந்து போராடினார். தொடர் போராட்டத்தினால் 27 வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அப்போராட்டத்தில் 1990 - ஆம் ஆண்டு வெற்றியும் பெற்றார். 1994 - ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
13) வட்டாரக் கூட்டமைப்பு :-
(a) அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் முயற்சி என்ன?
வட்டாரக் கூட்டமைப்பு
(b) வட்டாரக் கூட்டமைப்பினால் என்ன அமைப்பு தோன்றியது?
வட்டாரக் கூட்டமைப்பின் விளைவாக 'சார்க்' அமைப்பு தோன்றியது.
(c) தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு முதல் கூட்டம் எங்கு, எப்போது நடைபெற்றது?
தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு முதல் கூட்டம் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் நாள் வங்காளத்தில் டாக்கா நகரில் நடைபெற்றது.
(d) சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் யார்?
வங்காள தேசத்தைச் சார்ந்த ஆஸான் சார்க் அமைப்பின் முதல் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார்.
14) சார்க் அமைப்பு :-
(a) சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் எவை?
வங்காள தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகள் உறுப்பு நாடுகளாக இடம் பெற்றன.
(b) சார்க் வருடாந்திர மாநாடு எங்கு நடைபெற்றது.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி டெல்லியில் சார்க் வருடாந்திர மாநாடு நடைபெற்றது.
(c) சார்க் அமைப்பில் 8-வது உறுப்பு நாடாக சேர்ந்தது எது?
சார்க் வருடாந்திர மாநாட்டில் ஆப்கானிய அதிபத் ஹமீது கர்சாய் கலந்து கொண்டு சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தானை 8 வது உறுப்பு நாடாக சேர்த்துள்ளார்.
(d) சார்க் அமைப்பின் 16 வது மாநாடு நடைபெற்ற இடம் எது?
பூடான் தலைநகரம் திம்புவில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 மற்றும் 29 ம் நாள் சார்க் அமைப்பின் 16 வது மாநாடு நடைபெற்றது.
(e) சார்க் உறுப்பு நாடுகளின் பரஸ்பர உறவுகள் யாவை?
போக்குவரத்து, கடித சேவை, சுற்றுலா, வானியல், சுகாதாரம், வேளாண்மை, கிராமப் புணரமைப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் உதவி செய்து பரஸ்பர நல்லுறவை வளர்த்துக் கொள்கின்றன சார்க் உறுப்பு நாடுகள்.
15) இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு பற்றிக் கூறு?
இந்தியா பாகிஸ்தானிடையே கடந்த காலங்களில் பகைமை நிலவி வந்த போதிலும் அவற்றை முறியடித்து இருநாடுகளும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. மார்ச 16, 1999 டெல்லி-லாகூர் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு இரு நாடுகளிடையே நெருக்கம் ஏற்பட்டது. மேலும் ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிடையே எரிவாயு குழாய் இணைப்பு மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு மேம்பட்டு வருகிறது.
16) இந்தியா-சீனா நல்லுறவு யாது?
1) 1949 ஆம் ஆண்டு சீனா குடியரசானதை முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா.
2) இதனைத் தொடர்ந்து இந்தியா-சீனா தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டன.
3) ஐ,நா.வில் சீனா உறுப்பு நாடாகச் சேருவதற்கு இந்தியா தனது ஆதரவை நல்கியது.
4) இதற்கு பிரதிபலனாக ஐ,நா- வின் பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம்பெறுவதற்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்தது.
இவ்வாறு இந்தியாவும், சீனாவும் தங்களுக்குள் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டன.
17) இந்தியா - இலங்கை :-
(a) இலங்கை எந்த மதத்தை அடிப்படையாகக் கொண்டது?
இலங்கை புத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டது.
(b) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புத்த மதத்தை பரப்பச் சென்றது யார்?
மெளரியப் பேரரசர் அசோகரின் மகள் மற்றும் மகன் இருவரும் தன் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி புத்த மதத்தைப் பரப்ப இலங்கை சென்றனர்.
(c) இந்தியா இலங்கை இடையே ஏற்பட்ட உறவு எது?
இரு நாடுகளுக்குமிடையில் வியாபார உறவு ஏற்பட்டது. மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கி வருகிறது. இந்த உறவு அமைதியான முறையில் நீடித்து வருகிறது.
18) இந்தியா - வங்காளதேசம் :-
(a) எந்த ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் பிரிந்து தனி நாடாகியது?
1971-ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் பெருமுயற்சி மற்றும் ஆதரவினால் பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் பிரிந்து தனி நாடாகியது.
(b) பாகிஸ்தான்-வங்காளதேசம் இவ்விரு நாடுகளுக்கிடையே செய்த ஒப்பந்தம் யாது?
1972-ஆம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கிடையே நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் அமைதி பராமரிப்பிற்கான 25 வருட ஒப்பந்தம் ஒன்று டாக்கா நகரில் செய்து கொள்ளப்பட்டது.
(c) பாகிஸ்தான் - வங்காள தேசம் இவற்றிற்கிடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்ட பிரச்சினை யாது?
கங்கை நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட பராக்கா அணை கட்டும் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது.
இவ்வாறு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் இந்தியா வங்காள தேசத்திற்கு உற்ற நண்பனாகத் திகழ்ந்து வருகிறது.
19) இந்தியாவால் அமைதி நிலைநாட்டப்பட்ட பிரச்சனைகள் இரண்டினைக் கூறு.
சூயஸ் கால்வாய் :-
1956 ஆம் ஆண்டு எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். இதனை எதிர்த்து பிரான்சு இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எகிப்து மீது படையெடுத்தது. இந்தியாவின் தலையீட்டால் அங்கு போர் தவிர்க்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டது.
காங்கோ :-
காங்கோ ஒரு ஆப்பிரிக்க நாடு. 1960 ஆம் ஆண்டு இங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. ஐ.நா சபை இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதன் பின் படைத் தளபதி K.A.S. இராஜா தலைமையில் இந்திய அமைதிப்படை காங்கோவிற்கு அனுப்பப்பட்டு அங்கு அமைதி நிலை நாட்டப்பட்டது.
20) சைப்ரஸ் தீவின் போர் மற்றும் அமைதி, இந்திய விடுதலை பற்றி சிறு குறிப்பு வரைக.
சைப்ரஸ் :-
தீவிர கிறித்துவர்கள் மற்றும் துருக்கி முஸ்லீம்கள் இடையே சைப்ரஸ் தீவில் உள் நாட்டுப்போர் தோன்றியது. இந்திய படைத் தளபதி திம்மையா தலைமையில் ஐ.நா அமைதிப் பாதுகாப்புப்படை ஒன்று சைப்ரஸ்க்கு அனுப்பப்பட்டது. இவரது தீவிர முயற்சியால் சைப்ரஸ் தீவில் அமைதி நிலைநாட்டப்பட்டது.
இந்திய விடுதலை :-
இந்தியா வன்முறையற்ற மற்றும் அஹிம்சை கொள்கைகள் மூலம் மகாத்மா காந்தியின் தலைமையில் விடுதலை அடைந்தது. விடுதலைக்குப் பிறகு உலக நாடுகளுக்கிடையே அமைதி நிலைப்பாட்டை நிலைநிறுத்த கடுமையாக பாடுபட்டு வருகிறது.