Topics |
---|
Part - I
1. நாட்டு வருமானம்
a) வருமானத்தின் அடிப்படையில் மக்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
நம் சமுதாயத்தில் மக்களை செல்வந்தர்கள் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் என தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
b) உலக நாடுகளை வருமானத்தின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்?
உலகநாடுகளை அவற்றின் நாட்டு வருமானத்தின் அடிப்படையில் வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
c)நாட்டின் வருமானம் எதைக் குறிக்கும்?
ஒரு நாட்டின் வருமானம் அந்நாடு மேற்கொள்ளும் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் குறியீடுகளில் ஒன்றாக அமைகிறது.
d) ஒரு நாட்டின் வருமானம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு நாட்டின் வருமானம் அந்நாடு மேற்கொள்ளும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
2. வரையறு - நாட்டு வருமானம்
நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஒராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பின் அளவே ஆகும். நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி என்னும் அழைக்கப்படுகிறது. எனவே நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டின் மொத்த வருமானத்தைக் குறிக்கும் சொல்லாகும். நாட்டு வருமானத்தினை தெரிந்து கொள்வதன் வாயிலாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
3. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகள் பற்றிக் கூறு?
பொருட்கள்
ஒரு நாட்டில் ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள், இரயில் என்ஜின்கள், பேனா, பென்சில், அரிசி, கோதுமை, மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருட்களைக் குறிக்கும்.
பணிகள்
பணிகள் என்பது மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், கைவினைஞர்கள் போன்றவர்களின் பணிகளாகும்,இத்தகைய பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பின் அளவே நாட்டு வருமானம் எனப்படுகிறது.
4. உற்பத்திக் காரணிகள்
உற்பத்திக் காரணிகள் என்பது நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் தொழிலமைப்பைதக் குறிக்கும்.
நாட்டு வருமானம் பற்றிய அடிப்படைக் கூறுகள்
நாட்டு வருமானத்தின் அடிப்படைக் கூறுகள் 5 வகைப்படும். அவை
1. மொத்த நாட்டு உற்பத்தி
2. மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. நிகர நாட்டு உற்பத்தி
4. நிகர உள்நாட்டு உற்பத்தி
5. தலாவருமானம்
5. மொத்த நாட்டு உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தி விளக்கம் தருக?
மொத்த நாட்டு உற்பத்தி
ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்பும், அந்நாட்டு மக்கள் ஓராண்டில் ஈட்டிய வருமானமும், வெளிநாட்டு முதலீட்டின் மூலம் கிடைக்கும் இலாபமும் சேர்ந்ததே மொத்த நாட்டு உற்பத்தியாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் ஓர் அண்டில் அந்நாட்டிற்கு சொந்தமான உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பைக் குறிக்கும்.
6. நிகரநாட்டு உற்பத்தி, நிகர உள்நாட்டு உற்பத்தி குறிப்பு வரைக?
நிகர நாட்டு உற்பத்தி
மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானச் செலவை கழித்தபின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
நிகர நாட்டு உற்பத்தி =நாட்டு உற்பத்தி - தேய்மானச் செலவு
நிகர உள்நாட்டு உற்பத்தி:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானச் செலவை கழித்தால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி= மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானச் செலவு
7. வரையறு - தேய்மானச் செலவு, தலா வருமானம்:
தேய்மானச் செலவு:
உற்பத்தியில் மூலதனப் பொருட்களின் (இயந்திரங்கள்) பழுதை சரி செய்ய மேற்கொள்ளப்படும் செலவினங்கள் தேய்மானச் செலவு எனப்படும்.
தலாவருமானம்:
நாட்டு வருமானத்ததை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைக்கும் ஈவு தலா வருமானம் எனப்படும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கப் பயன்படும் கருவி தலா வருமானமாகும். தலா வருமானம் உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் கருதப்படும்.
நாட்டு வருமானம்
தலாவருமானம் =_________________
மக்கள் தொகை
8. உலக வங்கி அறிக்கையின்படி பல்வேறு நாடுகளின் தலா வருமானத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் ஒப்பிடுக?
நாட்டின் பெயர் தலா வருமானம்
(அமெரிக்க டாலரில்)
1. ஜப்பான் 47960
2. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 46040
3. இங்கிலாந்து 42740
4. ஜெர்மனி 38860
5. பிரான்ஸ் 38500
6. இத்தாலி 33540
7. பிரேசில் 4870
8. சீனா 2360
9. இலங்கை 1540
10.இந்தியா 950
11.பாகிஸ்தான் 870
12.வங்காள தேசம் 470
9. நாட்டு வருமானத்தை எத்தனை முறைகளில் கணக்கிடலாம்? அவை யாவை? இந்தியாவில் எந்த முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?
நாட்டு வருமானம் மூன்று வழிமுறைகளில் கணக்கிடப்படுகிறது. அவை
1. உற்பத்தி முறை
2. வருமான முறை
3. செலவின முறை
இந்தியாவில் நாட்டு வருமானம் கணக்கிடப்படும் முறை:
இந்தியாவில் பொதுவாக உற்பத்தி முறை மற்றும் வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது. செலவின முறையில் இந்தியாவில் கணக்கிடப்படவில்லை.
10. நாட்டு வருமானம் கணக்கிடப்படும் மூன்று முறைகளை விளக்குக:
ஒரு நாட்டின வருமானம் கீழ்க்கண்ட முறைகளில் கணக்கிடப்படுகிறது.
1. உற்பத்தி முறை
2. வருமான முறை
3. செலவான முறை
1. உற்பத்தி முறை:
நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மற்றும் பணிகளின் ஒட்டு மொத்த மதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு இம்முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
2. வருமான முறை:
இம்முறையில் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
3. செலவின முறை:
இம்முறையில் மக்களின் நுகரும் பொருட்களுக்கான செலவு, முதலீடு, சேமிப்பு, மூன்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
11. நாட்டு வருமானக் கணக்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் என்ன? அப்பிரச்சனைகள் யாவை?
நாட்டு வருமானக் கணக்கீட்டின் போது பொருட்களின் உற்பத்தி, பணிகள், நாட்டு மக்களின் வருமானம், செலவு, சேமிப்பு போன்றவை மதிப்பிடப்படுகிறது. ஆனால் மேற்கூறியவற்றினைப் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்கவில்லையென்றால் நாட்டு வருமானக் கணக்கீட்டின் போதுபல்வேறு பிரச்சனைகள் ஏற்படும், இப்பிரச்சனைகளே நாட்டு வருமானக் கணக்கீட்டின் போது ஏற்படும் பிரச்சனைகள் எனப்படும்.
அத்தகைய பிரச்சனைகள்:
*கருப்புப் பணம்
*பணம் சாரா பொருளாதாரம்
*இருமுறை கணக்கிடுதல்
*நம்பத்தகுந்த புள்ளி விவரங்கள் இல்லாமை
*இல்லதரசிகளின் பணிகள்
*சமூகப் பணிகள்
12. கருப்புப் பணம்:
a)கருப்புப் பணம் என்பது என்ன?
கருப்புப் பணம் என்பது கணக்கில் காட்டப்படாத பணமாகும். அதாவது நாட்டின் வருமானத் கணக்கீட்டின் போது அக்கணக்கில் காட்டப்படாத பணமாகும். எனவே இது கருப்புப் பணம் எனப்படுகிறது.
b) கருப்புப் பணம் எவ்வழியில் ஈட்டப்படுகிறது?
கருப்புப் பணம் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் ஈட்டப்பட்ட வருவாய் ஆகும்.
c) கருப்புப் பணமானது எதைப் பாதிக்கிறது?
கருப்புப் பணமானது ஓட்டு மொத்த சமுதாயத்தையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது.
d) கருப்புப் பணம் நாட்டு வருமானத்தை எவ்வாறு மதிப்பிட வழிவகை செய்கிறது?
கருப்புப் பணமானது நாட்டு வருமானத்தை குறைத்து மதிப்பிட வழிவகை செய்கிறது.
13. பணம் சாரா பொருளாதாரம், நம்பத்தகாத புள்ளி விபரங்கள்:-
a) பணம் சாரா பொருளாதாரம் என்றால் என்ன?
பெரும்பாலான பரிமாற்றங்கள் முறையற்ற பண்டமாற்ற முறையில் நடைபெறுகின்றது. இம்முறை பணம் சாரா பொருளாதாரம் எனப்படுகிறது.
b) முறையற்ற பண்டமாற்று பெரும்பாலும் எங்கு நடைபெறுகிறது?
கிராமப் பகுதிகளில் பெரும்பாலான பரிமாற்றங்கள் முறையற்று காணப்படுகிறது.
c) எத்துறையின் புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மை அற்றதாகக் காணப்படுகிறது?
வேளாண்மைத் துறையில் திரட்டப்டும் வருமானம் குறித்த புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மை அற்றதாகக் காணப்படுகிறது.
d) பணம் சாரா பொருளாதாரம், நம்பகமற்ற புள்ளி விவரங்கள் இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?
* பணம் சாரா பொருளாதாரம் நாட்டு வருமானக் கணக்கீட்டை உண்மை அளவைவிட குறைத்து மதிப்பிடுகிறது.
* நம்பகமற்ற புள்ளிவிவரங்களால் நாட்டு வருமானக் கணக்கீடு நம்பகத்தன்மை அற்றதாகவும். அறிவியல் தன்மை கொண்டதாகவும் இல்லை.
14. இரு முறை கணக்கீடுதல்:
a) இரு முறை கணக்கிடுதல் என்றால் என்ன?
இருமுறை கணக்கிடுதல் என்பது பண்டங்கள் உற்பத்தியில் இடுபொருட்களின் மதிப்பு இரண்டுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாகும். மேலும் இது நாட்டு வருமானக் கணக்கீடுகளின் பிரச்சனைகளில் காரணியாகும்.
b) எந்தெந்த முறைகளில் இடு பொருட்களின் மதிப்பு கணக்கிடப்படுகிறது?
இடுபொருட்களின் மதிப்பு பண்டங்கள் உற்பத்தி முதலிலும் பின் முடிவுற்ற பண்டங்களின் மதிப்பிலும் சேர்ந்து கணக்கிடப்படுவதாகும்.
c) இருமுறை கணக்கிடுதலால் ஏற்படும் விளைவு யாது?
இருமுறைக் கணக்கிடுதலால் நாட்டில் வருமானக் கணக்கீடு உண்மை நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
15. இல்லத்தரசிகளின் பணிகள், சமூகப் பணிகள்:
a) நாட்டு வருமானக் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படாத இல்லத்தரசிகளின் பணிகள் யாவை?
வீட்டு வேலைகள். வீட்டைப் பராமரித்தல், சமூகப்பணிகள், வீட்டில் மேற்கொள்ளும் மதிப்பு மிக்க பணிகள் ஆகியவை வருமானக் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
b)நாட்டு வருமானக் கணக்கீடு எப்பணிகளின் மதிப்பை புறக்கணித்தது?
*தானே முன்வந்து செய்பவர்களின் பணிகள்
*ஊதியமில்லாத சமூகப் பணிகள் போன்றவையாகும்.
மதிப்பு மிக்க புனிதப் பணியாற்றியவர் யார்?
அன்னை தெரசா
யார்யாருக்காக அன்னை தெரசா புனிதப்பணி மேற்கொண்டார்?
ஏழைகள், ஆதரவற்ற அனாதைகள் மற்றும் நோயாளிகள்.
16. நாட்டு வருமானத்தைப் பற்றி அறிந்து கொள்வதன் அவசியம் யாது?
* ஒரு நாட்டின் பொருளாதார செயல்பாடுகளின் நிலையைக் கணக்கிட பயன்படுகிறது.
*ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்பை அறியப்பயன்படுகிறது.
*ஒரு நாட்டி பொருளாதார வளர்ச்சியின் போக்கையும் வேகத்தையும் மற்றும் முந்தைய ஆண்டுகள் மற்றும் மற்ற நாடுகளுடன் நாட்டு வருமானத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் பயன்படுகிறது.
*நாட்டு வருமானத்தில் துறைகளின் பங்களிப்பை அறியப்பயன்படுகிறது.
*பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டி அரசு கொள்கைகளை வகுக்கவும் திட்டமிடவும் பயன்படுகிறது.
17. நாட்டு வருமானத்தில் பங்கு பெறும் துறைகள் எத்தனை வகைப்படும்? அவற்றைக் கூறுக?
நாட்டு வருமானத்தில் பங்கு பெறும் துறைகள் மூன்று வகைப்படும். அவை
1. முதன்மைத்துறை
2. இரண்டாம் துறை
3. பணிகள் துறை
முதன்மைத்துறை: முதன்மைத் துறை என்பது வேளாண்மை, வனத்துறை மீன்பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் ஆகும்.
இரண்டாம் துறை: இரண்டாம் துறை என்பது உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, கட்டுமானத்துறை போன்றவையாகும்.
பணிகள் துறை:பணிகள் துறை என்பது செய்தி, தொலைத் தொடர்பு, போக்குவரத்து வணிகம், வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்களைக் குறிக்கும்.
18. மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட இந்திய நாட்டு வருமானத்தில் துறைகளின் பங்களிப்பு விழுக்காடு மற்றும் இந்திய நாட்டு வருமானத்தின் போக்கு ஆகியவற்றை வரிசைப்படுத்துக.
இந்திய நாட்டு வருமானத்தில் துறைகளின் பங்களிப்பு
துறைகள் விழுக்காடு
முதன்மை துறை 15.8
இரண்டாம் துறை 25.8
பணிகள் துறை 58.4
19. பொருளாதார வளர்ச்சியில் பழங்கால அரசு, நவீன கால அரசு ஆகியவற்றின் பணிகளைக் கூறு?
பழங்கால அரசு:
பழங்கால அரசின் தலையிடாக் கொள்கையே அதிகம் காணப்பட்டது. தலையிடாக் கொள்கை என்பது அரசு பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது ஆகும். பழங்கால அரசுகள் ஏறத்தாழ காவல் அரசு போல் செயல்பட்டன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், நீதி வழங்குதல், மற்றும் அந்நிய நாட்டு படையெடுப்பில் இருந்து நாட்டைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை பழங்கால அரசு மேற்கொண்டு வந்தது.
நவீன கால அரசு:
அண்மைக் காலத்தில் அரசுகள் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் நலம் நாடும் அரசுகளாகச் செயல்பட்டு வருகின்றன.
20 நலம் நாடும் அரசின் பணிகள் யாவை?
1.பாதுகாப்புப் பணிகள்
ஒரு நாட்டில் அமைதி நிலவினால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் அடைய இயலும். எனவே மக்களை அந்நிய நாட்டுப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டுக் கலவரங்களில் இருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது அரசின் முதன்மைப் பணியாகும்.
2.நிர்வாகப் பணிகள்
மக்கள் பணியாற்றுவதற்கு சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நிதித்துறை ஆகிய மூன்றும் அரசின் முக்கிய அலகுகாளகச் செயல்படுகிறது.
3. சமூக பாதுகாப்புப் பணிகள்:-
அரசானது ஏழைகள், உடல் நலமற்றோர் மற்றும் வேலையற்றோர்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கிறது.
4. பொருளாதாரப் பணிகள்
வேளாண்மை, வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
இவ்வாறு அரசு தம் பணிகளை செம்மையாக செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளமாகிறது.
Practice in Related Chapters |
Nattu Varumanam |
Viduthalaikku pin indiya porulaatharam |