Topics |
---|
1) காலநிலை சிறுகுறிப்பு வரைக ?
இயற்கைச் சூழலின் அடிப்படை கூறுகளுள் ஒன்று காலநிலை. ஒரிடத்தின் நில அமைப்பு, மண், இயற்கைத்தாவரம் மற்றும் வேளாண்மை போன்றவற்றை நிர்ணயிக்கிறது. காலநிலை ஓரிடத்திற்கும் மற்றோரு இடத்திற்கும் மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் பல்வேறுபட்ட இயற்கை நிலத்தோற்றங்கள் பல்வேறு காலநிலையை உருவாக்குகின்றன. இந்தியாவின் காலநிலை தென் இந்தியாவின் காலநிலையில் இருந்து வெப்பம்,மழைப்பொழிவு போன்றவற்றில் மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு காலநிலைகளையும் அவற்றை நிர்ணயிக்கும் காரணிகளையும் இப்படத்தின் முலம் அறியலாம்.
2) வரையறு - வானிலை , எல் - நினோ.
வானிலை
வானிலை என்பது ஓரிடத்தின் வெளிமண்டலத்தில் உள்ள வெப்பம்,அழுத்தம்,காற்று,ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் அன்றாட நிலையை குறிப்பது ஆகும்.
எல்-நினோ
எல்-நினோ என்பது 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறைக்காணப்படும் ஓர் வானிலை நிகழ்வு. இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சியையும், வெள்ளத்தையும் கடும் வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் தென் மேற்கு பருவக்காற்று வீச ஆரம்பிப்தில் இது கால தாமதத்தை ஏற்படுத்துகிறது.
3)காலநிலை என்றால் என்ன ? அவற்றை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?
காலநிலை
காலநிலை என்பது ஓரிடத்தின் நீண்ட நாளைய உண்மையான சராசரி வானிலையைக் குறிப்பதாகும். இதன் அளவினை கண்டறிய குறைந்தபட்சம் 35 வருட கால வானிலை பதிவுகள் அவசியம்.
காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
ஓரிடத்தின் காலநிலையைக் கீழ்கண்ட காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவையாவன
1.அட்சங்கள்
2.உயரம்
3.கடலிலிருந்து தூரம்
4.காற்று
5.மலைகளின் அமைவு
4) அட்சங்கள்
இந்தியா எந்த அட்சங்களுக்கு இடையே அமைந்துள்ளது ?
இந்தியா 8°.4' அட்சத்திற்கும் 37°.6' வட அட்சத்திற்கும் இடையே அமைந்துள்ளது.
கடகரேகை எவற்றில் செல்கின்றன?
23°.30' வட அட்சமான கடக ரேகை நாட்டின் குறுக்கே செல்கிறது.
கடகரேகையின் தெற்கு, வடக்கு பகுதிகள் குளிர் வெப்பம் இவற்றை எவ்வாறு பெறுகின்றன ?
கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகள் பூமத்திய ரேகைக்கு மிக அருகே உள்ளதால் ஆண்டு முழுவதும் அதிகமான வெப்பத்தைப் பெறுகிறது.
கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மிதவெப்பமண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே இப்பகுதிகள் குளிர்காலங்களில் குறைந்த வெப்பத்தைப் பெறுகிறது.
5)உயரமான இடங்கள் சமவெளியைக் காட்டிலும் குளிர்ந்ந்து காணப்படுகின்றன ஏன் ? உதாரணத்துடன் கூறு .
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச்செல்ல 165 மீ உயரத்திற்கு 1° செ வீதம் வெப்பம் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே உயரமான இடங்கள் சமவெளிகளை விட குளிர்ந்நது காணப்படுகின்றன.
உதாரணம்
உதாரணமாக சமவெளியில் கடல்மட்டத்திலிருந்து 239 மீட்டர் உயரம் கொண்ட புது டில்லியின் சராசரி வெப்பம் ஜீன் மாதத்தில் 40.2° செ ஆக உள்ளது. அதே நேரத்தில் 2205 மீ உயரத்தில் அமைந்துள்ள சிம்லாவின் வெப்பம் 23.7° செ எனக் கணக்கிடப்படுகிறது.
6) கண்ட காலநிலை என்றால் என்ன ? அவை எங்கு நிலவுகிறது ? ஏன் ?
கண்ட காலநிலை
கோடைகாலத்தில் அதிக வெப்பமாகவும் குளிர்காலத்தில் அதிக குளிராகவும் உள்ள காலநிலை கண்ட காலநிலை எனப்படும்.
கண்ட காலநிலை நிலவும் இடம்
இந்தியாவில் கடக ரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் கண்ட காலநிலை நிலவுகிறது.
கண்ட காலநிலை ஏற்படக் காரணம்
இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்கள் கடலிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருப்பதே இதற்குக் காரணம் ஆகும். ஆனால் கடகரேகைக்கு தெற்கில் அமைந்துள்ள இடங்கள் மேற்கில் அரபிக்கடலாலும், கிழக்கில் வங்காளவிரிகுடாவாலும் சூழப்பட்டுள்ளதால் இங்கு மித வெப்பக் காலநிலை காணப்படுகிறது.
7) வரையறு - மேற்கு காற்று, வெப்பமண்டல புயல் காற்று, ஜெட் காற்று ?
மேற்கு காற்று
மேற்கு காற்றுகள் மத்திய தரைக்கடலில் உருவாகி இந்தியாவின் வடமேற்கு பகுதியை நோக்கி வீசுகிறது. இவ்வாறு காற்று கடல் பகுதியிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசம் போது மிதவெப்பநிலை ஏற்படுகிறது. மேற்குக் காற்று பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு மழையைத்தருகிறது.
வெப்பமண்டல புயல் காற்று
வெப்பமண்டல புயல் காற்று வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவின் கடற்கரையை நோக்கி வீசுகிறது. இது மிகுந்த உயிர்ச் சேதத்தையும், பொருட்சேதத்தையும் விளைவிக்கின்றன.
ஜெட் காற்று
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவகாற்றின் தொடக்கக் காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.
8) காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளுள் மலைகளின் அமைவும் பெரும் பங்கு வகிக்கின்றன ? - விளக்கம் தருக.
(1) வட இந்தியாவில் உள்ள உயர்ந்த இமயமலைத்தொடர் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவை நோக்கி வீசும் கடும் குளிர் காற்றைத் தடுக்கிறது.
(2) மழையைக்கொண்டுவரும் தென்மேற்குப்பருவக்காற்றினை தடுத்து காற்றில் உள்ள ஈரப்பதத்தினை வடகிழக்கு மற்றும் சிந்து கங்கை சமவெளிக்கு மழையாகப்பொழிய வழிவகுக்கின்றன.
(3) ஆரவல்லி மலைத்தொடர் தென்மேற்குப் பருவக்காற்றினை தடுப்பதால் இதன் மேற்குப்பகுதி மிகக் குறைந்த மழைப்பொழிவைப்பெற்று பாலைவனமாக உள்ளது.
மேற்கூறிய செயல்கள் அனைத்தும் மலைகள் அமைவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது.
9) வரையறு - மான்சூன், பருவக்காற்று ?
மான்சூன்
மான்சூன் என்ற சொல் அரேபிய சொல்லான மெளசிம் என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் பருவகாலம் என்பதாகும். இச்சொல் மாலுமிகளால் பல நூற்றாண்டுகளாக அரபிக்கடலில் வரும் காற்றுத் தொகுதிகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
பருவக்காற்று
கோடைகாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையே தங்களது திசையை முழுவதும் மாற்றிக் கொண்டு வீசும் காற்றுகளுக்கு பருவக்காற்று என்று பெயர். இக்காற்று ஆறு மாதங்கள் தென்மேற்கு திசையிலிருந்தும் வீசுகிறது. இப்பருவக்காற்றினால் இந்தியாவில் வெப்பமண்டல பருவக்காற்று காலநிலை நிலவுகிறது.
10) வெப்பமண்டல பருவக்காற்று எவ்வாறு நிலவுகிறது? இவற்றின் வகைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் யாவை ?
வெப்பமண்டல பருவக்காற்று நிலவும் விதம்
பருவக்காற்று ஏற்படும் போது இந்தியாவில் வெப்பமண்டல பருவக்காற்று காலநிலை நிலவுகிறது.
வகைகள்
பருவக்காற்றினை அது வீசும் திசையை அடிப்படையாகக் கொண்டு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று என இருவகைகளாகப்பிரிக்கலாம்.
முக்கிய அம்சங்கள்
பருவகாலங்களை மாற்றி மாற்றி அமைப்பதே பருவகாற்றுகளின் முக்கிய அம்சமாகும். இதுவே இந்தியாவின் காலநிலையைத் தீர்மாணிக்கிறது.
11) இந்தியாவில் நிலவும் வெவ்வேறு காலநிலையைக் குறிப்பிடுக ?
வானிலை நிபுணர்கள் பருவகாற்று மாற்றத்தின் அடிப்படையில் இந்தியாவின் காலநிலையை நான்கு வெவ்வேறு பருவகாலங்களாகப் பிரிக்கின்றனர்.
அவையாவன
(1) குளிர்காலம் - டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
(2) கோடைகாலம் - மார்ச் முதல் மே வரை
(3) தென்மேற்குப்பருவக்காற்று - ஜீன் முதல் செப்டம்பர் வரை
(4) வடகிழக்கு பருவக்காற்று - அக்டோபர் முதல் நவம்பர் வரை
12 ) வேறுபடுத்துக - குளிர்காலம், கோடைகாலம்
குளிர்காலம் | கோடைகாலம் |
(1) குளிர்காலத்தில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் மகர ரேகையின் மீது விழுகிறது. | (1) கோடைகாலத்தில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் கடகரேகையின் மீது விழுகிறது. |
(2) இதனால் வட இந்திய நிலப்பகுதி மிகவும் குளிர்வடைந்து சராசரி வெப்பம் 21 செ குறைந்து காணப்படுகிறது. | (2) இதனால் இந்தியாவின் வட பகுதியில் வெப்பத்தின் அளவு அதிகமாகிறது. வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல் நேர வெப்பம் 45 செ வரை உயர்கிறது. |
(3) குறைவான வெப்பத்தால் உயர் அழுத்தம் உருவாகிறது. | (3) அதிக வெப்பம் காரணமாக குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. |
13) பின்னடையும் பருவக்காற்று
பின்னடையும் பருவக்காற்று என்றால் என்ன ?
குளிர் காலத்தில் இந்தியாவில் குறைந்த வெப்பத்தால் உயர் அழுத்தம் உண்டாகிறது. இதற்கு மாறாக தென்னிந்தியாவில் தாழ்வு அழுத்தம் உருவாகிறது. இதன் விளைவாக காற்றானது உயர்அழுத்தப்பகுதியிலிருந்து தென்னிந்தியாவை நோக்கி வீசுகிறது. இந்தக் காற்றுக்கு பின்னடையும் பருவக்காற்று என்று பெயர்.
பின்னடையும் பருவக்காற்று மழையை அதிகம் தருவதில்லை ஏன் ?
இக்காற்று நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுவதால் மழையை அதிகம் தருவதில்லை.
பின்னடையும் பருவக்காற்று எவற்றிற்கு குளிர்கால மழையைத்தருகிறது ?
இக்காற்று வங்காளவிரிகுடாவை கடக்கும் பொழுது சிறிதளவு ஈரப்பதத்தைப் பெறுவதால் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரபிரதேசத்திற்கு குளிர்காலமழையைத்தருகிறது. இது பின்னடையும் பருவக்காற்றின் முக்கிய அம்சம் ஆகும்.
14) மேற்கத்திய இடையூறுகாற்று
மேற்கத்திய இடையூறு காற்று என்றால் என்ன ?
இந்தியாவில் குளிர்காலத்தில் மத்தியதரைக்கடலில் ஒரு தாழ்வு அழுத்தம் உருவாகி கிழக்கு நோக்கி நகர்ந்து ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவை வந்தடைகிறது. இத்தாழ்வு அழுத்தம் மேற்கத்திய இடையூறு காற்று என்றழைக்கப்படுகிறது.
மத்திய தரைக்கடலில் உருவாகும் தாழ்வு அழுத்தம் இந்தியாவிற்கு எவ்வாறு வருகிறது ?
இத்தாழ் அழுத்தத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஜெட் காற்றோட்டம் முக்கியப்பங்கு வகிக்கிறது.
மேற்கத்திய இடையூறுக் காற்றினால் மழைபெறும் பகுதிகள் யாவை ?
பஞ்சாப், ஹரியானா,இமாச்சலப்பிரதேசம் போன்றபகுதிகளாகும்.
15 ) தென்னிந்தியாவின் கோடைகால நிலவரத்தைக் கூறுக .
கோடைகாலத்தில் தென்னிந்தியாவில் மிதமான காலநிலையே நிலவுகிறது. ஏனெனில் இப்பகுதி கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு அதிக பட்ச வெப்பம் 26 செ முதல் 30 செ வரை வேறுபடுகிறது. வட இந்தியாவைக்காட்டிலும் இங்கு குறைந்த வெப்பம் நிலவுவதால் உயர் காற்றழுத்தம் உருவாகிறது.
வளிமண்டல அழுத்த நிலையின் காரணமாக காற்றானது தென்மேற்கிலிருந்து வடகிழக்காக அரபிக்கடல் மற்றும் வங்காளவிரிகுடாவில் வீசுகிறது. இது மே மாதத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு முன்பருவமழையைத் தருகிறது.
16) வரையறு - மாஞ்சாரல் , நார்வெஸ்டர், லூ
மாஞ்சாரல்
மாஞ்சாரல் எனப்படுவது இடியுடன் கூடிய மழையாகும். இது கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது.
நார்வெஸ்டர்
வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் என்றழைக்கப்படுகிறது. இத்தலக்காற்று பஞ்சாபில் கால்பைசாகி எனப்படுகிறது.
லூ
இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று லூ என்றழைக்கப்படுகிறது.
17) தென்மேற்கு பருவக்காற்று பற்றி எழுதுக ?
இதன் காலம் ஜீன் முதல் செப்டம்பர் வரை ஆகும். கோடைகாலத்திற்குபின் தென்மேற்கு பருவகாற்றின் தொடக்கத்துடன் மழைக்காலம் தொடங்குகிறது. அதிக வெப்பத்தால் குறைவழுத்தம் உருவாகிறது. மே மாத இறுதிக்குள் இந்தியாவின் வடமேற்கு பகுதியின் பெரும் பரப்பில் தாழ்வழுத்தம் அமைகிறது. அதே நேரத்தில் பெருங்கடல்கள் குளிர்வடைவதால் அங்கு உயர் அழுத்தம் ஏற்படுகிறது. காற்று உயர்வான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி வீசும் என்பது நாம் அறிந்ததே. எனவே காற்று கடலில் இருந்து இந்திய நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது. இக்காற்றையே தென்மேற்கு பருவக்காற்று என்று அழைக்கிறோம்.
18 )பருவ மழை வெடிப்பு பற்றிக் கூறுக ?
தென்மேற்கு பருவக்காற்று பூமத்திய ரேகையை கடக்கும்போது அதன் திசை மாற்றப்பட்டு தென்மேற்கு பருவக்காற்றாக வீசுகிறது. இக்காற்று இந்தியப்பெருங்கடலிலிருந்து தோன்றுவதால் அதிக வெப்பத்தை தாங்கிய காற்றாக உள்ளது. கேரளாவின் தென்பகுதியை அடையும் போது பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையை அளிப்பதின் மூலம் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பிப்பதை காட்டுகிறது. இதனை பருவமழை வெடிப்பு என்பர். தென்மேற்கு பருவக்காற்று இந்திய தீபகற்ப அமைப்பால் இரு கிளைகளாகவும் பிரிகிறது.
அவையாவன
அரபிக்கடல் கிளை
வங்காளவிரிகுடா கிளை
19 ) தென்மேற்கு பருவக்காற்று அரபிக்கடலில் எவ்வாறு காணப்படுகிறது ?
பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை ஓர் வலிமைமிக்க காற்று
இது அதிக மழைப்பொழிவைத் தருகிறது.
அரபிக்கடலிலிருந்து வீசும் இக்காற்றின் ஒரு பகுதி முதலில் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதுகிறது.
ஈரப்பதமிக்க இக்காற்று மலைச்சரிவுகளின் வழியே உயரே எழும்பி குளிர்வடைந்து மேற்கு கடற்கரைப்பகுதிக்கு பலத்த மழையைத் தருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மோதும் திசையில் அமைந்துள்ள மும்பை 150 செ.மீ மழையையும் மேற்கு தொடர்ச்சி மலையின் மறைவிலுள்ள மழை மறைவு பிரதேசத்தில் உள்ள புனே 50 செ.மீ மழையையும் பெறுகின்றன.
20 ) வரையறு
1) காற்று மோதும் பக்கம்
2) காற்று மோதாப்பக்கம்
3) மழைமறைவுப்பகுதி
1) காற்று மோதும் பக்கம்
காற்று வீசும் திசையை நோக்கியுள்ள மலைச்சரிவை காற்று மோதும் பக்கம் என்கிறோம் இது அதிக மழையை பெறுகிறது.
2) காற்று மோதாப்பக்கம்
மலையின் மறுபக்கச்சரிவு காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ளதால் அதனை காற்று மோதாப்பக்கம் என்கிறோம்.
3) மழைமறைவுப்பகுதி
மழைமறைவுப்பகுதி எனப்படுவது மழையின் காற்று மோதாப்பகுதியில் உள்ள மிகக் குறைந்த மழைபெறும் பகுதி மழைமறைவுப்பகுதி எனப்படும்.
21 )
தென்மேற்கு பருவக்காற்று எங்கு மழைப்பொழிவைத் தருவதில்லை ? எங்கு நல்ல மழைப்பொழிவைத்தருகின்றன ?
தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றாவது பகுதியானது இராஜஸ்தான் நோக்கி நகர்கிறது. அங்கு ஆரவல்லி மலைத்தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது. அதனால் இக்காற்று மலை மீது மோத இயலாததால் ராஜஸ்தானுக்கு மழைப்பொழிவை தருவதில்லை. இதனால்தான் மேற்கு இராஜஸ்தானின் ஒரு பகுதி பாலைவனமாக அமைந்துள்ளது. கடைசியில் காற்றின் பிரிவானது இமாசலபிரதேசத்தை அடைந்து பின் வங்காளவிரிகுடா கிளைக்காற்றுடன் கலந்து விடுகிறது. பின்பு இவை சிவாலிக் குன்றுகளால் தடுக்கப்படுகிறது. எனவே சிவாலிக் குன்றுகளின் மலையடிவாரத்தில் நல்ல மழைப்பொழிவைத் தருகின்றன.
22)வங்காளவிரிகுடா கிளை
வங்காளவிரிகுடாவிலிருந்து வரும் காற்று எந்த குன்றுகளின் மீது மோதுகிறது. ?
இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளின் மீது மோதுகிறது.
இக்காற்று எப்பகுதிக்கு கனமழையைத்தருகிறது ? ஏன் ?
ஈரப்பதம் தாங்கி வரும் இக்காற்றானது புனல்வடிவ குன்றுகளின் மீது மோதி திடீரென மேல் எழும்புவதால் இந்தியாவிலேயே அதிக மழைபெறும் இடமான சிரபுஞ்சிக்கு கனமழையைத்தருகிறது.
இக்காற்று எச்சமவெளிக்கு மழையைத்தருகிறது ?
இக்காற்றின் ஒரு பகுதி இமயமலைகளால் தடுக்கப்பட்டு மேற்கு நோக்கி நகர்ந்து கங்கை சமவெளிக்கு மழையைத் தருகிறது.
வங்காளவிரிகுடாவின் காற்று இறுதியில் எங்கு அதிக மழைப்பொழிவைத் தருகிறது ?
இறுதியாக வங்காள விரிகுடா கிளைக்காற்று அரபிக்கடல் கிளையுடன் சேர்ந்து இமயமலையின் அடிவாரமான சிவாலிக் குன்று பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்றன.
23) வடகிழக்கு பருவக்காற்று பற்றி எழுதுக .
சூரியன் மகர ரேகையை நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவகாற்று வட இந்தியாவில் இருந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பின்னோக்கி வர ஆரம்பிக்கிறது. கடல் பகுதியில் மித வெப்பத்தினால் குறைந்த அழுத்தமும், நிலப்பகுதியில் வெப்பம் குறைவதால் உயர் அழுத்தமும் ஏற்படுகிறது. இதானல் காற்று நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுகிறது. இது குளிர்ந்நத வறண்ட காற்று என்பதால் நிலப்பகுதிக்கு மழையைத்தருவதில்லை. ஆனால் இவ்வறண்ட காற்று வங்காளவிரிகுடாவைக் கடக்கும் பொழுது ஈரப்பதத்தை உறிஞ்சி சோழமண்டல கடற்கரைக்கு கனத்த மழையைத் தருகிறது. இதனால் தமிழ்நாடும் ஆந்திரபிரதேசமும் குளிர் காலத்தில் நல்ல மழையைப் பெறுகின்றன. இப்பருவத்தில் வங்காளவிரிகுடாவில் அடிக்கடி புயல்கள் உருவாகி சோழமண்டல கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் உண்டு பண்ணுகின்றன.
24) ஆண்டு முழுவதும் சீரற்ற மழைப்பரவல் என்பதைப்பற்றி எழுதுக.
நம் நாட்டின் 80% மழைப்பொழிவிற்கு காரணமாக அமைவது ஜீன் முதல் செப்டம்பர் வரை வீசும் தென்மேற்கு பருவக்காற்றே ஆகும். பருவக்காற்று வீசும் காலம் பொதுவாக 2 முதல் 4 மாதங்கள் வரை வேறுபடுகிறது. பொதுவாக பருவக்காற்று செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் வடமேற்கு திசையிலிருந்தும், அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டின் மற்றபகுதிகளிலிருந்தும் நவம்பர் மாதத்தில் சில பகுதிகளிலிருந்தும் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது.
25) மலைகளின் பயன்களைக் கூறு.
(1) நிலத்தோற்ற அமைப்புகள் மழையளவை பெரிதும் பாதிக்கின்றன.
(2) காற்றானது குஜராத் மற்றும் ராஜஸ்தான் வழியாக வீசினாலும் மலைகள் குறுக்கே காணப்படாததால் மழைப்பொழிவு ஏற்படுவதில்லை எனவே மலையானது மழைப்பொழிவிற்கு மிகவும் தேவையாகும்.
(3) காற்றானது மேற்கு கடற்கரையோரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது மோதி காற்று வீசுவதால் அதிக மழைப்பொழிவைத்தருகிறது.
(4) எடுத்துக்காட்டாக ஷில்லாங் பீடபூமி ஆண்டுக்கு 1270 செ.மீ அளவு மழைப்பொழிவைத் தருகிறது.
(5) ஆனால் மழைமறைவுப் பகுதியிலுள்ள அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் மத்திய பகுதி 163.7 செ.மீ அளவு ஆண்டு மழைப்பொழிவை பெறுகின்றன.
எனவே இதன் மூலம் நிலத்தோற்ற அமைப்பில் மலைகளின் செல்வாக்கை நாம் அறியலாம்.